
தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர் - ஒன்று (பெரியது)
- கடலைமாவு - 4 தேக்கரண்டி
- அரிசிமாவு - 2 தேக்கரண்டி
- மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
- சோம்புத்தூள் - 3/4 தேக்கரண்டி
- சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - 5/6 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
செய்யும் முறை

முதலில் காலிஃப்ளவரை நறுக்கி கொஞ்சம் பெரிய அளவு பூக்களாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கின பூக்களை சுடுநீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும்.

இதனை மைக்ரோவேவ் சேஃப் பாத்திரம் ஒன்றில் போட்டு, ஒரு மூடி போட்டு, 5 நிமிடம் மைக்ரோவேவில் வேக வைத்து எடுக்கவும்.

ஒரு கிண்ணத்தில், மேலே சொன்ன எல்லா மாவு, பொடி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் கலக்காமல் கலந்து வைக்கவும்.

இப்போது மைக்ரோவேவில் இருக்கும் வெந்த காலிஃப்ளவரை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, கலந்து வைத்திருக்கும் மசாலா பொடியை சிறிது சிறிதாக தூவி கரண்டியால் கலந்து விடவும். காய் வெந்து வரும் போது காயில் சேர்ந்திருக்கும் ஈரமே போதுமானதாக இருக்கும், வேறு தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.

எல்லா பொடியையும் தூவி முடித்ததும், 2, 3 தேக்கரண்டி எண்ணெயையும் விட்டு, எல்லா காய்களிலும் படுமாறு பிரட்டிக் கொள்ளவும்.

அடுத்து, ஒரு பேக்கிங் ட்ரேயில், அலுமினியஃபாயில் போட்டு (அல்லது) நாண்ஸ்டிக் (எண்ணெய்) ஸ்ப்ரே செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். இப்போது மசாலா தடவி தயார் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை இந்த ட்ரேயில் ஒன்றோடு ஒன்று படாமல் பரவலாக போடவும்.

இதனை 400 F முற்சூடு செய்த அவனில் வைத்து, 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு அவனை திறந்து, காய்களை எல்லாம் கொஞ்சம் திருப்பிவிட்டு, மேலும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் எல்லா காய்களுக்கும் படுமாறு விடவும்.

மேலும் ஒரு 15 நிமிடங்கள் பேக் செய்து, முடிக்கும் போது, ஒரு சில நிமிடங்கள் ப்ராய்ல் செட்டிங்கில் வைத்து, பிறகு எடுத்து பரிமாறவும். ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக் தயார்!
காலிஃப்ளவர் அளவை பொறுத்து மிளகாய் தூள், உப்பு அளவை, அவரவர் விருப்பத்திற்கு தக்கவாறு கூட்டி குறைத்து போடலாம். அதேப்போல அவரவர் வீட்டு அவனை பொறுத்து, பேக்கிங் நேர அளவுகளும் வித்தியாசப்படும். முதலில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வெந்திருப்பதை சரிப்பார்த்துக் கொண்டு மேலும் 5 அல்லது 10 நிமிடங்கள் கூட்டி வைக்கலாம்.

0 comments:
Post a Comment