டோ நட்
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு - 100 கிராம்
- சீனி - 50 கிராம்
- உருக்கிய வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- ட்ரை ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
- பால் - அரை கப்
- முட்டை - ஒன்று
- சாக்லேட் டிப்பிங் செய்ய :
- கோகோ பவுடர் - அரை கப்
- சீனி - கால் கப்
- வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- ஒரு இன்ச் அளவு வட்டமான மூடி - ஒன்று (அ) பிஸ்கட் கட்டர்
- 4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று
செய்முறை:
கால் கப் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்டைக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
மைதாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சீனியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.
பொடித்த சீனியுடன் வெண்ணெய் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளவும். அத்துடன் மைதா மாவு, முட்டை மற்றும் ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்
20 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து, ஒரு முறை பிசைந்து கொள்ளவும். மாவை ஒரு சாத்துக்குடி அளவு எடுத்து சப்பாத்தி பலகையில் வைத்து ஒரு இன்ச் உயரம் இருக்கும்படி திரட்டி, பெரிய வட்டமான மூடியினால் வெட்டிக் கொள்ளவும். பிறகு.நடுவில் சிறிய மூடியினால் வெட்டி கொள்ளவும். பார்ப்பதற்கு உளுந்து வடை போன்ற வடிவில் இருக்கும். இது போல மீதமுள்ள மாவிலும் தயார் செய்து கொள்ளவும்.
அவற்றைச் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். டோ நட் அழகாக பொங்கி வரும். எண்ணெயை வடித்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே மேலே பொடித்த சீனியை தூவிப் பரிமாறலாம்.
சாக்லேட் டிப்பிங் செய்ய சீனியில் அரை கப் தண்ணீர் விட்டு, கோகோ பவுடர், பட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கலவை 10 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும். சாஸ் போல திக்காக இருக்க வேண்டும்.
ஒரு டோ நட்டை எடுத்து ஒரு முள்கரண்டியால் குற்றியெடுத்து, சாக்லேட் சாஸில் பாதி அளவிற்கு டிப் செய்து எடுக்கவும்.
சாக்லேட் கோட்டிங் மேலே இருக்குமாறு ஒரு ப்ளேட்டில் வைத்து ஆறியதும் பரிமாறவும்.

0 comments:
Post a Comment