Thursday, July 28, 2016

Repeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.

பாதாம் எண்ணிக்கை 100 கிராமா? 100 நம்பரா?

பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண்ணிக்கையிலும் அது கிட்டத்தட்ட 100 பாதாம்களே வரும். அதாவது ஒரு கிராம் = ஒரு பாதாம். கூடக் குறைய இருக்கலாம் தவறில்லை.

டயட்டுக்கு முன்பாக கண்டிப்பாக உடல் பரிசோதனை, ப்ளட் டெஸ்ட் செய்யவேண்டுமா?

கண்டிப்பாக செய்துகொள்வது நல்லது, அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தெரியவரும், அதற்கேற்ப சில பொருட்களை விலக்கியும் சேர்த்தும் டயட் எடுக்க முடியும். டயட்டிற்கு பின்பும் இந்த டெஸ்ட்களை மீண்டும் எடுப்பதன் மூலம் டயட்டால் விளைந்த நன்மைகள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே தெரியவரும்.

கடைகளில் விற்கப்படும் பேலியோ பிரியாணி ரைஸ், பேலியோ பரோட்டா, பேலியோ ப்ரோட்டீன் பார், பேலியோ சர்க்கரை, பேலியோ சுகர்லெஸ் கரும்பு ஜூஸ், பேலியோ சப்பாத்தி, பேலியோ எண்ணெய் போன்றவற்றை வாங்கி உண்ணலாமா?  

கூடாது. பேலியோவில் உங்கள் உணவை நீங்களே சமைத்து உண்ணுவதே சிறப்பு. ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுகள், பேலியோ என்ற அடைமொழியுடன் கடைகளில் விற்கப்படுபவனவற்றை வாங்கி காசை வீணாக்காதீர்கள். தேவையான பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடித்தது போல சமைத்து ஆரோக்கியமாக டயட் துவங்குங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் என்ன பொருட்கள் கலந்திருக்கிறது என்று பாருங்கள், செயற்கை நிறங்கள், செயற்கை இனிப்பு, ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவைகள் இருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது உத்தமம்.

கோழி முட்டை நாட்டுக் கோழி முட்டையா? ப்ராய்லர் கோழிமுட்டையா? எது சாப்பிடுவது?

பேலியோவைப் பொறுத்தவரை தானாகவே இரை தேடி உண்ணும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே முதல் தேர்வு. முட்டையைப் பொறுத்தவரை நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் உன்னதம். கிடைக்காவிட்டால் ப்ராய்லர் கோழி முட்டைகளை சாப்பிடலாம். கவனம் நாட்டுக் கோழி முட்டை என்பது பண்ணைகளில் ஹைப்ரிட் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு, அந்தக் கோழிகள் இயற்கையாக உண்ணாத பொருட்களை தீவனமாகக் கொடுத்து உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும், கோழிகளும் விற்பனையாகிறது. இதை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட ப்ராய்லர்கோழியே வாங்கி உண்ணுவது உத்தமம்.

உங்களால் அருகாமை கிராமங்களில் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகளை, முட்டைகளை வாங்க முடியுமென்றால் உங்கள் உடல் நலத்திற்கென வாரம் ஒரு நாள் பயணம் செய்து அப்படி வளர்ப்பவர்களிடம் வாங்கிப் பயனடையலாம். உங்கள் முயற்சியையும், நேரத்தையும் பொறுத்தது அது. இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாதவர்கள், ப்ராய்லர் வாங்கி டயட்டை முன்னெடுங்கள்.

டேட்ஸ் சாப்பிடலாமா? ஓட்ஸ் சாப்பிடலாமா? பழங்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?வேர்க்கடலை, பருப்பு ஏன் தவிர்க்கவேண்டும்? பீன்ஸ் ஏன் சாப்பிடக்கூடாது? ஏன் பழங்களை ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது?

டேட்ஸ் என்பது ஒரு இனிப்பு உணவுதான், அதைச் சாப்பிட்டு இரும்புச் சத்து உடலில் சேரவேண்டுமானால் ஒவ்வொரு வேளையும் 1.5கிலோ அளவுக்குச் சாப்பிடவேண்டும், அதில் சேரும் இரும்புச் சத்தைவிட உங்களின் உடலில் சேரும் சர்க்கரை அளவுகள் அதிகம்.

பழங்களிலும் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, டயபடிஸ் இருப்பவர்கள் பழம் சாப்பிட்டால் உடனே சர்க்கரை அளவுகள் ரத்தத்தில் ஏறும். போலவே உடல் எடை குறைக்க டயட் எடுப்பவர்கள் முதல் 30  
நாட்கள் பழங்கள் தவிர்ப்பது நல்லது, இது இன்சுலினை ஏற்றும், உடல் எடை கூடும், ஏன் எடை குறையவில்லை என்று குழப்பமே மிஞ்சும்.

பருப்பு, லெகூம் வகைகளில் வரும் பீன்ஸ் வகைகளும் இயற்கையாகவே பைட்டிக் அமிலம் (Pytic Acid) என்ற தற்காப்பு விஷயத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த இயற்கை தற்காப்பு விஷயம் பருப்பு, பீன்ஸ் வகைகளை நாம் சமைத்து உண்ணும்போதும் அழியாமல் உடலில் சேர்ந்து பல உபாதைகளையும், அதனுடன் நாம் உண்ணும் பிற உணவுகளின் சத்துக்களை நம் உடலில் சேரவிடாமலும் செய்கின்றன. அதனாலேயே பாலியோவில் அவற்றுக்குத் தடை.

பேலியோவில் குதித்துவிட்டேன், நான் எப்படி சாப்பிடவேண்டும், கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டில் இருப்பவைகளுடன் கூடவே கோதுமை தோசை, தேன் தினைமாவு, ஹெர்பாலைப் பவுடர், கொள்ளு ரசம், ஓட்ஸ் அல்வா, அப்பளம், எண்ணெயில் நன்றாகப் பொரித்த சிக்கன், வெல்லம் போட்ட கடலைமிட்டாய், இன்னபிறவற்றையும் கூட சேர்த்து சாப்பிடலாமா?

கூடாது, கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை மட்டும் முதல் 30 நாட்கள் கடுமையாகக் கடைபிடிக்கவும். மேலே சொன்ன உணவுகள் யாவும் பேலியோவில் விலக்கப்பட்டவை.

நீங்கள் கொடுத்த டயட் சார்ட்டினை நானே சிறிது மாற்றி, காலையில் ஒரு காபியுடன் 5 பட்டர் பிஸ்கெட் (பட்டர் பாதாம்தானே?) அல்லது மேரி பிஸ்கெட், 100 பாதாமுக்குப் பதில் 15 பாதாம், இரண்டு இட்லி, மஞ்சள் கரு இல்லாத முட்டை, இதயத்துக்கு நலமளிக்கும் சன்ப்ளவர் ஆயிலில் செய்த மெதுவடை 1, மதியம் 1 ப்ளேட் சோறு, பீன்ஸ் பொரியல், அவரைக்காய் கூட்டு, நிறைய சன்ப்ளவர் எண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கு பொரியல், இரவு சப்பாத்தி 4, பனீர் டிக்கா, சிக்கன் 65 போன்றவைகளை சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டால் விரைவில் எடை குறையும் என்பதற்காக நானே சொந்தமாக ஜிந்திச்சி இப்படி டயட் சார்ட் எடுத்துக்கொண்டேன், இது சரியான டயட்தானா?

 வேலை மெனெக்கெட்டு டயட் சார்ட் கொடுப்பது அதை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மேலே உள்ள உணவுகளில் சூரியகாந்தி எண்ணெய், பொரித்த உணவுகள், பிஸ்கெட், சோறு, சப்பாத்தி போன்றவைகளால் உங்கள் எடை கூடும், எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 போன்றவைகளால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவுகள் கூடும் எனவே தயவுசெய்து உங்கள் ஜிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கொடுத்துள்ள டயட் சார்ட்டின்படி வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். குறைவாகச் சாப்பிடுவது, கலோரி கணக்குகள் இங்கே உதவாது. பசியுடன் இருக்கவைக்கும் எந்த டயட்டும் நல்ல டயட் இல்லை.

என் எடை 105 கிலோ, எனக்கு சர்க்கரை குறைபாடு, பிபி, தைராய்ட் எல்லாம் உண்டு, நான் பேலியோவை கடுமையாக கடைபிடித்துவிட்டு என் எடையை 75 கிலோவுக்குக் குறைத்துவிட்டு, சர்க்கரை, பிபி எல்லாம் நார்மலாக்கிவிட்டு பிறகு சாதாரணமாக நான் சாப்பிடலாமா? 

தாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் அப்படிச் சாப்பிட ஆரம்பித்த உடன் உங்கள் எடை ஏறும், சர்க்கரை, பிபி அளவுகள் கூடும், பழைய படி எடையில் செஞ்சுரி அடித்து மேல் மூச்சு வாங்க மீண்டும் பேலியோவுக்குத்தான் ஓடிவருவீர்கள்.

அப்படி என்றால் காலம் பூராவும் நான் பேலியோவைத்தான் உண்ணவேண்டுமா?

கிட்டத்தட்ட ஆமாம். காலம்பூரவும் அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, இனிப்புகள், குப்பை உணவுகள் மானாவாரியாக உள்ளே தள்ளி உடல் நிலை கெட்டபோது வராத இந்தக் கேள்வி ஏன் பேலியோவுக்கு மட்டும் வருகிறது என்பதை யோசியுங்கள். உங்களின் சாதாரண உணவுகள் உங்கள் உடலுக்கு உபாதைகள் தருகின்றன, பேலியோ உங்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகிறது என்றால் எதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உண்பீர்கள் என்பதற்கான விடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேன்டும்.

ஏன் காபி குடிக்கக்கூடாது? என்னால் காபி குடிக்கமுடியவில்லை என்றால் நான் இறந்தேவிடுவேன்.

இல்லை நீங்கள் இறக்கமாட்டீர்கள். காபி என்பது ஒரு போதைதான், இருதயத்துக்கு பலமான அதிர்ச்சி கொடுக்கும் இந்தப் பானம்தான் உங்களின் ரத்த அழுத்தத்திற்கான முழு முதல் காரணி. நீங்கள் 50 வருடம் தினம் 10 லோட்டா காபி குடிப்பவர்களாகக் கூட இருங்கள், 1 வாரம் காபி குடிக்காமல் இருந்துவிட்டால் அதன்பிறகு இப்படி ஒரு பானத்திற்காகவா உயிர்விடத் துணிந்தோம் என்று நீங்களே உங்களைப் பார்த்து கேட்கும் நிலை வரும். ஆம், காபி குடிப்பதை விட்டால் முதல் 3-4 நாட்களுக்கு தலை வலிக்கும், நன்றாக நெற்றியில் சுக்கை பாலில் அரைத்து பற்றுப் போட்டுவிட்டு கம்மென்று படுத்து விடுங்கள், 5-ம் நாள் காபி எனும் போதை உங்கள் வாழ்விலிருந்து ஒழிந்துவிடும். இது நரசுஸ் மீது ஆணை. கேவலம் ஒரு காபியைக் கூட உணவிலிருந்து ஒழிக்கமுடியாவிட்டால் நம்மால் எந்த டயட்டையும் எடுத்து உடல் நலம் பேண முடியாது.

வேறு வழியே இல்லை என்றால்..

காபிக்கு மாற்றாக புல்லட் ப்ரூப் காபி, பட்டர் டீ, க்ரீன் டீ போன்றவைகள் எடுக்கலாம்.

புல்லட் ப்ரூப் காபி செய்முறை - இங்கே.

பட்டர் டீ செய்முறை - இங்கே

பேலியோ டயட் ஆரம்பித்த உடன் எனக்கு மலச்சிக்கல் வருகிறது. வயிறு வலிக்கிறது, பேதி ஆகிறது, தலை வலிக்கிறது, சோர்வாக உணர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் உடல் கார்போஹைட்ரேட் மூலம் சக்தி கிடைப்பதிலிருந்து கொழுப்பு மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வழி மாறுவதற்கான அறிகுறிகள்தான் மேலுள்ளவை. பெரும்பாலும் ஒரு வாரத்திறகுள் இவை சரியாகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். டயட் சார்ட்படி டயட் எடுத்தாம் மட்டுமே இது பொருந்தும், உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் சரியான அளவு குடிக்காமல் விட்டாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம்.

மலச்சிக்கல் நீங்க பேலியோ காய்கறிகள், தினம் ஒரு கீரை, காலை எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர், போன்றவை உதவும். அதிக காய்கறிகள், சரியான நீர் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும்.

பேலியோ எடுத்தது முதல் தாகம் அதிகமாக இருக்கிறது, வாய் உலர்ந்து போகிறது, கண் எரிச்சலாக இருக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், கொழுப்பு சார்ந்து தானியம் தவிர்த்து டயட் எடுக்கும்பொழுது உடலில் முதலில் ஏற்படும் எடை இழப்பு என்பது தானியம் சாப்பிட்டதால் உடல் தேக்கி வைத்திருக்கும் நீர் எடையே. இந்த உடல் நீர் வற்றும்பொழுது தாகம் எடுக்கும், எனவே பேலியோவில் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். 3-4லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். வாய் உலர்ந்து போகுதல், கண் எரிச்சல் போன்றவை உடலில் கொழுப்பு எரிவதாலும் நிகழலாம் அல்லது நீங்கள் அளவு குறைவாக சாப்பிடுவதாலும் நிகழலாம்.   

பேலியோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு டயட் இல்லையா? நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன், எனக்கு பேலியோ டயட் கடைபிடிக்க முடியுமா?

முடியும். தெளிவாக இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான டயட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும். எல்லாவகை உணவுப் பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் டயட் சார்ட் தேவைப்படுவதால், விருப்பு, வெறுப்பு, மதம், கடவுள், ஜாதி இன்னபிறவற்றை உடல்நலம் காக்கும் உணவுக்குறிப்புகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.

மேலே தெளிவாக டயட் சார்ட் கொடுக்கப்பட்டும் எனக்கு எழும் சந்தேகங்கள் பின்வருமாறு:
டேட்ஸ், ஓட்ஸ், சிறு தானியங்கள், வேர்க்கடலை, முந்திரி, தேன், வெல்லம், கருப்பட்டி, ஸ்டீவியா, சுகர் ப்ரீ மாத்திரைகள், காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், வெந்தய தோசை, மசாலாதோசை, கேஎப்சி/மெக்டொனால்ட் சிக்கன், போன்ற நீங்கள் டயட் சார்ட்டில் குறிப்பிடாத உணவுகளைச் சாப்பிடலாமா?

கூடாது.

தெள்ளத் தெளிவாக இந்த பேலியோவின் அடிப்படையிலான டயட் சார்ட் என்பது ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு சார்ந்த அடிப்படையைக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. டயட் சார்ட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகச் சாப்பிடுவது, மற்ற உணவுகளைக் கலந்து சாப்பிடுவது. ஹெர்பாலைப், கொள்ளு பவுடர், மூலிகைகள், சிட்டுக்குருவி லேகியம் போன்றவைகளை சேர்த்து உண்பது என்பது கூடாது.

பேலியோ டயட் எடுக்கும்பொழூது சரக்கடிக்கலாமா? 
பேலியோ டயட் என்று இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாராயமும் சிகரெட்டும் கூடவே கூடாது. ஆண்டுக்கணக்கில் சிகரெட்டும், சரக்குமாக இருந்த நண்பர்கள் பேலியோ டயட் எடுத்தபிறகு அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு இந்தப் பழக்கங்களிலிருந்து வெளியேற விருப்பம் இருந்தால் இந்த டயட் அதற்கு உதவும். சரக்கடிக்க பேலியோ டயட்டை சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தினால் நிச்சயம் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

கூகுள் தளத்தில் பேலியோ என்று தேடினால் வரும் ரிசல்டுகளில் சொல்லப்படுபம் விஷயங்களுக்கும், இந்தக் குழுவில் சொல்லப்படும் விஷயங்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறதே?

ஆம். ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் நமது மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை பேலியோ டயட்டில் செய்திருக்கிறோம். உலகின் முழு முதல் முட்டை கூட இல்லாத சைவ பேலியோ டயட்டும் இந்தக் குழுவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் மூலம் பெறப்படும் கொழுப்புணவுதான் அதிக நன்மைகளைத் தரும் என்றாலும், பிறப்பிலிருந்தே சைவ உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு பல காரணிகளால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காக உடலுத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த சைவ டயட் தயாரிக்கப் பட்டுள்ளது.

சைவ பேலியோ, அசைவ பேலியோ எது சிறந்தது?

பேலியோ என்றாலே அசைவம்தான், மனிதன் நெருப்பே கண்டுபிடிக்காத காலத்தில் சைவத்தை விட அசைவமே அவனுக்குத் தெரிந்த பிரதான உணவாக இருந்தது. ஆக அசைவ பேலியோவே சிறந்தது, உடல் எடை குறைப்புக்கு மட்டும் என்றால் சைவ பேலியோவும், நடை பயிற்சியுமே போதுமானது. உடல் பிரச்சனைகளோடு டயட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடத் தயார் என்றால் அவர்களுக்கு பலனலளிக்கக் கூடிய டயட் பேலியோவில் கிடைக்கும். நீங்கள் பால் குடிப்பீர்கள் என்றால் முட்டையும் அதைப் போலத்தான் என்று நினைத்துக்கொள்ளவும். முடியவே முடியாத மனத்தடை என்றால் வேண்டியதில்லை, மனத்தடையோடு எந்த புதிய முயற்சியும் நன்மை தராது. 


பேலியோ பற்றி தமிழில் ஏதேனும் புத்தகம் வந்துள்ளதா?

நமது குழுமம் சார்பிலேயே நியாண்டர் செல்வன் அவர்களின் முக்கிய பதிவுகள் தொகுக்கப்பட்டு பிடிஎஃப் வடிவில் இலவச புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. குழுமத்தில் இருப்பவர்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://paleogod.blogspot.in/2015/08/munnor-unavu-pdf-first-tamil-paleo-guide.html 

என்னால் தடாலடியாக பேலியோவுக்கு மாறமுடியாது, ஆனாலும் நான் பேலியோவுக்கு மாற விரும்புகிறேன், சிறிது சிறிதாக பேலியோவுக்கு மாற வழிமுறை உள்ளதா?

உள்ளது. திரு.கோகுல் குமரன் அவர்களின் படிப்படியாக பேலியோ உணவுமுறைக்கு மாறும் இந்த கையேடு உங்களுக்கு உதவும்.

https://www.facebook.com/groups/tamilhealth/262831150574038/

பேலியோ டயட் பற்றிய சுலபமான புரிதலுக்காக டிப்ஸ் எதாவது? 

உணவு என்றாலே டிப்ஸ் இல்லாமலா? கோகுல் குமரன் அவர்கள் தொகுத்த பேலியோ டிப்ஸ் உங்களுக்காக.

இங்கே

http://paleogod.blogspot.in/2015/08/paleo-diet-tips.html

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget