மக்கள் உணவு குழுமத்தில் உணவு முறை மாற்றம் பற்றிய தகவல்கள் அறிந்துகொண்டு உங்கள் உடல் பிரச்சனைகளை (உதா : உடல் பருமன், நீரிழிவு, குருதி கொதிப்பு, கொலஸ்டிரால்,பிசிஓடி, சொரியாஸிஸ் போன்றவை) தீர்க்க முயலும் உங்களுக்கு வாழ்த்துக்கள். வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் இது போன்ற பிரச்சனைகள் பிற்காலத்தில் வந்தால் அவற்றுக்கு மருத்துவ கட்டணம் கொட்டிக்கொடுக்க தேவையில்லை என்பதற்காய் குழுமத்தில் இணைந்தவர்களையும் வரவேற்கிறேன்.
மக்கள் உணவு என்றால் என்ன என ஏற்கனவே உங்களுக்கு ஓரளவு புரிதல் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு எளிய உதாரணம் வழி விளக்கலாம். நீங்கள் இடது பக்கமாய் இருக்கும் சாலையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். (இப்போது நீங்கள் உண்ணும் உணவு, இப்போதைய வாழ்வியல் முறை). இந்த சாலையில் தொடர்ந்து நீங்கள் சென்றால் உங்கள் பாதை முடிவில் நீங்கள் சந்திக்கப்போகும் பிரச்சனைகள் தான் நீரிழிவு, குருதி கொதிப்பு, கொலஸ்டிரால், இதய நோய்கள்..நாங்கள் சொல்வது, நீங்கள் இடது பக்கம் போகவேண்டாம், வலது பக்கம் செல்லுங்கள். (மக்கள் உணவு முறை), அப்படி செல்லும்போது நீங்கள் நீரிழிவு, குருதி கொதிப்பு, கொலஸ்டிரால், இதய நோய்களை சந்திக்கமாட்டீர்கள் என்பதே.
நாங்கள் இதனை குருட்டாம்போக்காக சொல்லவில்லை. தன் உடல் பிரச்சனைகளை உணவு மற்றும் வாழ்வியல் முறை மூலம் தீர்த்துக்கொண்ட செல்வன் ஜி, இதை எப்படி தன் தாய்தமிழக மக்களுக்கு கொண்டு செல்வது என உறுதியாக போராடி ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தை கட்டமைத்து, அதன் மூலம் சர்க்கரையில்லா பொங்கல் குழுமத்தை கட்டமைத்து (நீரிழிவுக்கான தனி குழு), பெண்களுக்கு தனி குழு என அமைத்து கிளைபரப்பி மூன்று புத்தகங்கள் 6 இடங்களில் பெரிய கூட்டங்கள் எல்லாம் நடத்தி, ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். இவை எல்லாம் நாங்கள் எங்கள் உடலில் பரிசோதித்து பார்த்து, எங்கள் சர்க்கரை நோய், உடல் பருமன், கொலஸ்டிரால், குருதி கொதிப்பு எல்லாம் நீங்கி, புத்துணர்வோடு கூடிய ஆரோக்கிய வாழ்வை அடைந்தபின், உங்களுக்கு சொல்கிறோம். தவிப்போடு சொல்கிறோம். எங்கள் கண் முன்னே மக்கள் உடல் பிரச்சனைகளோடு தவிப்பதை, மருந்துவமனைகளுக்கு நகைகளை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் செலவழித்து மன உளைச்சளுக்கு உள்ளாவதை கண்டு, மனம் வருந்தித்தான் உங்களை இந்த ஆரோக்கிய வாழ்வு பயணத்தில் எங்களோடு இணைய அழைக்கிறோம்.
இப்படி இணைய குழுமம் அமைத்து, உங்கள் உடல் நலனை காக்க தவிப்போடு காத்திருக்கும் எங்களுக்கு இதனால் பத்து பைசா லாபம் இல்லை. எங்கள் சொந்த நேரம், குடும்பத்தோடு செலவிடவேண்டிய நேரம் ஆகியவற்றை செலவழித்து தான் இதை செய்கிறோம். உண்மையில் நீங்கள் நன்றி சொல்வதானால் எங்கள் குடும்பத்தினருக்கு தான் சொல்லவேண்டும். அதை கூட நாங்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதே உண்மை.
தொடர்ந்து குழுமத்தில் இணைந்திருந்து பதிவுகளை படிப்பதன் மூலமே நீங்கள் இந்த உணவு முறையை கற்க முடியும். உங்கள் உணவு முறையில், வாழ்வியல் முறையில் நாங்கள் சொல்லும் இந்த எளிய மாறுதல்கள் உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்காது, சொல்லப்போனால் உங்கள் மாத பட்ஜெட்டில் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மிச்சம் பிடிக்கலாம். ஆரோக்கிய வாழ்வு, எதிர்கால மருத்துவமனை செலவு இல்லாமல் போதல் ஆகியவை கூடுதல் லாபம்.
இந்த குழுவில் இணைந்திருப்பவர்கள் சிலர், தாய் குழுமமான பேலியோ டயட் குழுவிலும் (ஆரோக்கியம் & நல்வாழ்வு) இணைந்திருப்பீர்கள். சிலர் சர்க்கரையில்லா பொங்கல் குழுவிலும் இருப்பீர்கள். நீங்கள் செய்யவேண்டிய பணி ஒன்று உள்ளது. இந்த குழுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, முடிந்தால் பதில் சொல்லுங்கள். பதில் சொல்லுங்கள் என்றால் இஷ்டப்படி டயட் சொல்வதல்ல. எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது என ஒருவர் கேள்வி கேட்டால் அவருக்கு அந்த குழுவின் சுட்டியை அளிப்பது. எனக்கு உடல் பருமன் உள்ளது என ஒருவர் கேட்டால், உங்கள் பொருளாதார நிலை எப்படி, அடிக்கடி நான் வெஜ் எடுக்க முடியுமா சார் என கேட்டு, அவருக்கு பேலியோ டயட் குழுவான ஆரோக்கியம் நல்வாழ்வுக்கு வழி காட்டுங்கள். ஒன்றை மனதில் கொள்ளவேண்டும். இது ஒரு சேவை நோக்கத்தோடு இயங்கும் குழு. அன்பு தான் இங்கே அடி நாதமாக ஒலிக்கவேண்டும். உடல் பிரச்சனைகளோடு, தவிப்போடு உணவு முறை பற்றிய தகவல் கேட்பவர்களிடம் எந்த வகையிலும் எள்ளல், கிண்டல், அன்பற்ற பேச்சு வேண்டாம். அன்போடு, கனிவோடு, பரிவோடு உங்கள் பதில்கள், துணை கேள்விகள் இருக்கவேண்டும்.
ஆரோக்கியம் நல்வாழ்வு மற்றும் சர்க்கரையில்லா பொங்கல் குழுவில் வலியுறுத்தப்படுவது போல மெடிக்கல் ரிப்போட் கொடுத்தால் தான் உணவு முறை மாற்றம் சொல்வோம் என்பது இந்த குழுவில் இல்லை. அதே நேரம் செல்வன் ஜி சொன்னது போல வருடம் ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தங்களுக்கு டயபட்டீஸ் இருக்கிறது என்பது தெரியாமல் பத்து இருபது ஆண்டுகள் இருந்துவிட்டு, கிட்னி பெயிலியர், டயாலிஸிஸ் செய்யவேண்டும் என்று மருத்துவர் சொன்னவுடன் இதய வலி வந்தவர்கள் பலர் உண்டு என்பதால் தான் இதை வலியுறுத்துகிறோம். குறைந்தபட்சம் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் காலை வெறும் வயிற்றில் சென்று உங்கள் குருதி சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
நீங்கள் எல்லாம் மருத்துவர்களா, நீங்கள் சொல்லும் உணவு, மற்றும் வாழ்வியல் முறை மாற்றத்தை ஏன் கடைபிடிக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் அனைவரும் மருத்துவர்கள் அல்ல, ஆனால் எங்களில் சிலர் மருத்துவர்களே..நான் இணையம் வழி நியூட்ரிஷியன் கோர்ஸ் படித்து வருகிறேன். உணவு முறை மாற்றம் வழியாக என்னுடைய உடலில் இருந்த சர்க்கரை நோயை விரட்டியிருக்கிறேன். (நான் என் சர்க்கரை நோயை விரட்டிய கதை பெரியது. வாயில் சவைத்து சவைத்து சாப்பிடுவது, நிலவேம்பு, கோமியோபதி போன்றவை எனக்கு உதவவில்லை. ஆங்கில மருத்துவம் மட்டுமே உதவியது. ஆங்கில மருத்துவரே பரிந்துரைத்து என்னுடைய சர்க்கரை நோய் மருத்துகளை நிறுத்தும் அளவுக்கு உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை மாற்றம் உதவியது.) ஆகவே இந்த உணவு முறை மாற்றத்தை உங்களுக்கு பரிந்துரைக்க எனக்கு தகுதி இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
மக்கள் உணவுன்னு ஒரு பேஸ்புக் க்ரூப்புபா..
என்ன சொல்றாங்க...
சோறு தின்னக்கூடாதுன்னு சொல்றாங்கபா...
போடாங்....நம்மால முடியாது நீ வேணா பாலோ பண்ணிக்க...
இப்படி ஒரு உரையாடல் உங்களுக்கும் உங்கள் நன்பருக்கும் நடந்தால் அவரிடம் போய் தம் கட்டவேண்டாம். லூஸ்ல விடுங்க..உங்கள் பர்ஸில் உங்கள் டிரைவிங் லைசென்ஸை எப்படி பத்திரமாக வைத்திருக்கிறீர்கள் ? அதே போலத்தான் இந்த உணவு முறை. வெரி பர்சனல். அதே நேரம் டிரைவிங் லைசென்ஸ் எப்படி எடுப்பது என உங்கள் தோழி கேட்டால் ஆர்.டி.ஓ ஆபீஸுக்கு அழைத்துப்போவீர்கள் அல்லவா ? நம் மக்கள் உணவு குழு தான் ஆர்.டி.ஓ ஆபீஸ். இங்கே அழைத்து வந்து குழுவின் பதிவுகளை அவர்களே படிக்குமாறு செய்யவும். குழுவின் புத்தகங்களை கையில் கொடுக்கவும். ப்ரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கவும். அதாவது குதிரையை தண்ணீர் தொட்டி வரை அழைந்துவந்து விட்டுவிடவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் மிச்சம்.
யாரையும் நீங்கள் மாற்ற முடியாது, அவர்களாக மாறினால் தான் உண்டு. உங்கள் குடும்பத்தில் மனைவியோ, கணவனோ உங்கள் உணவு மற்றும் வாழ்வியல் மாற்றத்தை கேலி செய்தால், எதிர்த்து பேசினால், மிகவும் தன்மையாக இந்த உணவு முறைகளை பற்றி விளக்கவும். அவர்களுடைய புரிந்துணர்வு தான் இந்த உணவு மற்றும் வாழ்வியல் மாற்றத்தின் வெற்றி. அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் மட்டும் இந்த உணவு முறை தொடர அனுமதி பெறுங்கள். இங்கும் அன்பு தான் ஆயுதம். கனிவு தான் பாதுகாப்பு ஷீல்ட். செல்வன் ஜி மற்றும் சிவராம் அண்ணா புத்தகம் படித்தால் மட்டுமே போதும். அவர்களின் நீண்ட கால நம்பிக்கைகளுக்கு வேட்டு விழும். மல்லிகை மகள் புத்தகம் கொடுத்து படிக்க வைத்தால் அவர்களும் இந்த உணவு முறை மாற்றத்தில் குதித்துவிடுவார்கள். நம் தமிழ் சூழலில் கணவன் மனைவி இணைந்து நடைபயிற்சி கூட போவதில்லை, கருத்து ஒற்றுமை இல்லை, உணவு முறை மாற்றம் எப்படி சாத்தியமாகும் என தயங்க வேண்டாம். பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. அதே நேரம் நீங்கள் ஆண் எனில் தன்மையாக அன்பாக பேசி, சினிமா, பீச், விடுமுறைக்கு அழைத்து போய், புதிய உடைகள் வாங்கி கொடுத்து வீட்டம்மணியை தாஜா செய்யுங்கள். அவருக்கு பிடித்தது போல நடந்துகொள்ளுங்கள்..கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்..இதை எல்லாமா நாங்கள் சொல்லிக்கொடுக்கவேண்டும், உங்களுக்கு தெரியாதது ஒன்றுமல்ல..(மேற்க்கண்ட பத்தி நகைச்சுவைக்காக எழுதியது அய்யா, இப்போது குறைந்தபட்சம் நீங்கள் புன்முறுவல் பூக்கவேண்டும்).
செல்வன் ஜி கொடுத்த டயட் சார்ட்டில் அரிசி உண்டு. ஐ.ஆர் 64 என்பது லாங் கிரெயின் அரிசி. அதாவது நீளமாக பாஸ்மதி போல இருக்கும். ஐ.ஆர் 64 கிடைக்கவில்லை என்றால் பாஸ்மதியே பயன்படுத்தலாம். இது எதுவும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை பலமுறை கழுவி (பத்து முறைக்கு மேல்), கொஞ்ச நேரம் ஊறவைத்து, அதன் பின்னர் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணை ஊற்றி கொதித்த நீரில் வெந்த அரிசியை கஞ்சி வடித்து சமைக்கவேண்டும். குக்கர் எளிதானது தான், ஆனால் அரிசியில் இருக்கும் நச்சு பொருட்களை நீக்க இந்த முறையை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
தேங்கய் கால் மூடி சாப்பிட சொல்லி இருக்கிறார். சிலபேர் எளிதாக கடித்து சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். சிலருக்கு வாய் வலிக்கிறது என்பார்கள். கொஞ்சம் இளம் தேங்காயாக இருந்தால் - முற்றிய இளநீரை வெட்டியபோது கிடைக்கும் தேங்காய் - மிக எளிதாக சாப்பிடலாம். ஏன் முழு தேங்காய் கூட சாப்பிடலாம்.
தினமும் முட்டை சாப்பிட சொல்லி இருக்கிறார். 4 முட்டை. முடிந்தால் நாட்டுக்கோழி முட்டை வாங்கலாம். முடியவில்லை என்றால் பிராய்லர் கோழி முட்டையே வாங்கலாம். நாலு முட்டையை ஆம்லேட் ஆக, முட்டை பொரியலாக, ஆப்-பாயிலாக, புல்-பாயிலாக எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு வேளை முட்டை எடுத்தால் நன்றாக சமாளிக்க முடியும். (பொதுவாக இந்த உணவு முறையில் வீட்டில் சமைத்த உணவு தான் சாப்பிடவேண்டும்).
பாமாயில், கடலை எண்ணை, சூரியகாந்தி எண்ணை தவிர்க்கவேண்டும். தேங்காய் எண்ணை அல்லது செக்கில் ஆட்டிய நல்லெண்ணை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
தொடர்ந்து பதிவுகள் மூலம் உங்களுக்கு இந்த உணவு முறை பற்றி விளக்குவேன். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும் என்பதே இந்த உணவு முறையின் அடி நாதம். அரிசி, கோதுமை தான் எரிந்து உங்களுக்கு ஒற்றைத்தலைவலியில் இருந்து குதிகால் வலி வரை கொடுக்கிறாது. அந்த அரிசி, கோதுமைக்கு மாற்றாக (மூன்று வேளையும் - 6 இட்லி - 4 கப் சாதம் கொஞ்சம் பொரியல் - 4 தோசை / 3 சப்பாத்தி) - முட்டை, தேங்காய், என பரிந்துரைக்கிறோம். நாங்கள் உங்களை பட்டினி கிடக்க சொல்லவில்லை. ஒரு உணவுக்கு பதில் வேறு உணவு. இடது பக்கத்துக்கு பதில் வலது பக்கம். இவ்வளவே !!!
புரிந்துணர்வோடு கூடிய ஒத்துழைப்புடன், இந்த மக்கள் உணவை மாபெரும் இயக்கமாக தமிழகத்தில் மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...செல்வன், ஷங்கர் ஜி, சிவராம் அண்ணா மற்றும் பிற குழு மட்டுறுத்துனர்களோடு நானும் காத்திருக்கிறேன். செய்வீர்களா ?


0 comments:
Post a Comment